பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் சுற்றுலா காவல்துறை தனிப்பிரிவு திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் சுற்றுலா வரும் பெண் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நிர்பயா நிதியின் கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம் ‘சுற்றுலா காவல்துறை தனிப்பிரிவு’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தளங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது, பெண்களுக்கான உதவி மையங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள சுற்றுலா காவல்துறை திட்டத்தை தெலுங்கானா, ஆந்திரா, டெல்லி, கோவா, கேரளா உள்ளிட்ட 15 மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் நிலையில், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் நாட்டிலேயே இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் இந்த பாதுகாப்பு திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட சுற்றுலாத் தளங்களில் மகளிருக்கான பாதுகாப்பு என்ற பட்டியலில், தமிழகத்தின் பெயர் இடம் பெறாதது சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
















