தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதேபோல் சிவகங்கையிலும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கைது செய்யும் போது, சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பாண்டியை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்தது. தொடர்ந்து போலீசாரை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
நாமக்கல் பூங்கா சாலையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவர்களை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
















