கிரீன்லாந்தை கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்காவுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் எதிர்ப்பை காட்டிவருகின்றன…. கிரீன்லாந்தை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துகளை நட்பு நாடான பிரான்ஸ் கேலி செய்திருக்கிறது
கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும், இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டி வரும் நிலையில், டென்மார்க்கோ, நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதிக்கவில்லை… அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அந்நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியையும் நிறுத்திவைக்க முன்வந்துள்ளன…
இந்த நிலையில், பிரிட்டன், ஜெர்மனி, சுவீடன், பிரான்ஸ், நெதர்லாந்து, பின்லாந்து போன்ற நாடுகளுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 10 சதவிகித வரி விதிப்பதாகக் கூறிய டிரம்ப், கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமாகும் வரை வரி விதிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று கூறியிருக்கிறார்.
கிரீன்லாந்தை கைப்பற்றியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் டிரம்ப், ஆர்க்டிக் பெருங்கடலில் பெரும்பலத்துடன் உள்ள ரஷ்யா, சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க, கிரீன்லாந்து தங்களுக்கு வேண்டும் என்ற காரணத்தையும் கூறுகிறார்…
மூட்டை பூச்சிக்கு பயந்து, வீட்டை எரிப்பதா என்பது போல், அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சை கடுமையாக கேலி செய்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்…
கடைத்தெருவுக்கு செல்லும் குழந்தை, அதுவேண்டும், இது வேண்டும் என்று பெற்றோரிடம் ஓயாமல் அழுது அடம்பிடிப்பது போன்று, தனது விருப்பம் போல் உலக நாடுகளை ஆட்டிப்படைக்க முயலும் டிரம்பை,பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேரடியாகவே கேலி செய்திருப்பது பேசு பொருளாகியுள்ளது….
ஆர்டிக் பிரதேசத்தில் டிரம்ப் ஏன் தீவிரமாக இருக்கிறார் என்பதை அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் நியாயப்படுத்தியதற்கு பிரான்ஸ் பதிலளித்திருக்கிறது…
எப்போதாவது தீ விபத்து ஏற்பட்டால்தான் தீயணைப்பு வீரர்கள் வருவார்கள் என்பதால், இப்போதே வீட்டை எரிப்பது நல்லது என்பது போல் டிரம்ப் பேச்சு உள்ளதாக கிண்டலடித்துள்ளது பிரான்ஸ்…
சமீபத்தில் காசா அமைதி வாரியத்தில் உறுப்பினராக இணைய பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்… ஆனால் அதில் இணைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மறுப்பு தெரிவித்திருந்தார்.
அப்போதே இருதரப்புக்கும் மோதல் முற்றிவிட்டது… இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், பிரான்ஸ் அதிபரை யாரும் விரும்பவில்லை என்றும், அவர் மிக விரைவில் பதவியில் இருந்து வெளியேறுவார் என்றும் கூறினார்… பிரான்ஸ் ஒயின்கள் மற்றும் ஷாம்பெயின்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப் போவதாகவும் மிரட்டியிருந்தார்..
இதற்கு எதிர்வினையாற்றிய பிரான்ஸ் அதிபர், பிரான்ஸின் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்கு செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட கட்டண அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, பயனற்றவை என்று பதிலடி தந்துள்ளார்..
இதனிடையே கிரீன்லாந்தை கட்டுப்பாட்டில் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும், ஐரோப்பிய ஒன்றியம், வாஷிங்டன் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை ஆபத்தில் தள்ளும் என்று அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார் பிரான்ஸ் நிதியமைச்சர் ரோலண்ட் லெஸ்கூர்…
இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்தாலும், ஐரோப்பா, அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் லெஸ்கூர் கூறியிருக்கிறார்…
அதே நேரத்தில், டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலோ, அச்சுறுத்தலோ ஐரோப்பிய ஒன்றியத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
அமெரிக்கா உடனான உறவு மோசமானால், ஐரோப்பிய ஒன்றியம் அதன் சக்திவாய்ந்த வர்த்தக பழிவாங்கும் கருவியான “வர்த்தக பாஸூக்கா”-வை பயன்படுத்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.
















