கோவையில்பாதாள சாக்கடை பணிகள் ஒருவழியாக முடிந்தபோதிலும், தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலை முறையாக செப்பனிடப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்..
தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், கோவை விளாங்குறிச்சி, சேரன் மாநகர், கொடிசியா, கணபதி மாநகர் உள்ளிட்ட பகுதிகள் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றன. கோவையின் பிரதான பகுதியான அவிநாசி சாலையில் இருந்து சரவணம்பட்டி, சத்தி சாலைக்கு செல்ல தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலை பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது…
அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாகனப்பெருக்கம், இந்த சாலையை நெருக்கடியாக மாற்றியுள்ளது… போதாதென்று பாதாள சாக்கடை பணிகள் சாலையை மேலும் மோசமாக்கிவிட்டதாகக் கூறுகின்றனர் பொதுமக்கள்…
விளாங்குறிச்சி சாலையில் அனுதினமும், புழுதியால் புகைமூட்டம்போல் துாசு படர்ந்து காணப்படுவதாக கூறும் அப்பகுதிவாசிகள், இதனால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாக குறைகூறுகின்றனர்..
சேரன் மாநகர் பகுதியில் முதலில் ஏழு பேருந்துகள் இயக்கப்பட்டுவந்த நிலையில், சாலை சரிவர செப்பனிடப்படாததால் பேருந்துகளின் எண்ணிக்கையையும் அரசுப் போக்குவரத்துக் கழகம் குறைத்துவிட்டது என்கிறார்கள் இவர்கள்….
பாதாள சாக்கடை, இணையதள சேவை, குடிநீர் வடிகால் என அடுத்தடுத்து தோண்டப்படுவதால், சாலை கரடுமுரடான பள்ளம் போல் காட்சியளிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.. எனவே அரசு துறைகள் ஒருங்கிணைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை…
















