சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், தேர்தல் வியூகம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் பணியை அதிமுகவும், பாஜகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
பிரதமா் மோடி நாளை தமிழகம் வரும் நிலையில், அதற்குள் தோ்தல் கூட்டணியை இறுதி செய்யவும், கூட்டணித் தலைவா்களை ஒரே மேடையில் பங்கேற்க வைக்கவும் தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
அதன் அடிப்படையில் புதன்கிழமை அமமுக இணைப்பு நடந்தது. இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சந்தித்தார். அப்போது, மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அனைவருக்கும் காலை விருந்தளிக்கப்பட்ட பின்னர்,
அதிமுக -பாஜக இடையே தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
















