கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழமை வாய்ந்த முருகன் கோயிலில், பழைய சிலையை அகற்றி புதிய சிலையை வைத்த அர்ச்சகரை பிடித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தோகை மலையில், பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த முருகப்பெருமானின் சிலை அகற்றப்பட்டு, புதிய சிலை இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அறநிலையத்துறைக்கு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கோயில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தியை பிடித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
அவர் அளித்த தகவலின்படி, குளத்தின் சுனை நீருக்கடியில் இருந்து அதிகாரிகள் சிலையை மீட்டனர். கிராம மக்கள் நலமுடனும், செழிப்புடனும் இருக்கவே ஆண்டி கோலத்தில் இருந்த சிலையை அகற்றி, ராஜகோலத்தில் உள்ள முருகன் சிலை வைத்ததாக அதிகாரிகளிடம் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நகைகள் காணாமல் போனதாகவும் இது குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்த வேண்டுமெனவும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















