சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட தெருவோரக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், கைவிடப்பட்ட முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் தனது வாழ்நாளையே சீதா தேவி என்ற பெண்மணி அர்ப்பணித்துள்ளார்.
தன் இளமைக்கால வலிகளையே தனது ஆயுதமாக மாற்றிக்கொண்ட சீதா தேவி, ‘ஸ்ட்ரீட் விஷன் சோஷியல் டிரஸ்ட் என்ற அமைப்பைத் தொடங்கி, சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட தெருவோரக் குழந்தைகளின் கல்விக்கு வித்திட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு நிலவிய கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, சீதாவின் வாழ்க்கையில் ஒரு பேரிடியாக அமைந்தது. டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த அவரது தாய், ஒரு அரசு மருத்துவமனைக்கு வெளியே ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழந்தார்.
தன் தாய்க்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற வைராக்கியத்துடன், ஒரு ஆட்டோ ரிக்ஷாவை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட அவசர வாகனமாக மாற்றினார்.. இரவு பகல் பாராமல் உழைத்த அவர், சுமார் 800-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் வழங்கி உயிர் காத்தார்.
















