அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம், சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சி தலைமையிடம் 10,175 பேர் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர்.
அதில், தகுதியானவர்களை வேட்பாளராக தேர்வு செய்வதற்கான நேர்காணல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. பின்னர் கடந்த 12-ம் தேதி நடைபெறவிருந்த நேர்காணல் நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுபவர்களை நேர்காணல் செய்யும் பணி மீண்டும் தொடங்கியது.
இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் பங்கேற்றனர்.
அவர்களிடம் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார். அப்போது விருப்ப மனு அளித்தவர்களின் தகுதி, தொகுதி நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்த நிலவரங்களை அவர் கேட்டறிந்தார்.
















