அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கியுள்ள காசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ள நிலையில், இந்தியா எந்த முடிவும் எடுக்கவில்லை. நட்பு நாடுகள் மேற்கொள்ளும் முடிவை பொறுத்த அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன் மொழிந்த காசா அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக, காசா அமைதி வாரியத்தை ட்ரம்ப் உருவாக்கியுள்ளார்.
போரால் கடும் பாதிப்புக்குள்ளான காசாவை மறு சீரமைப்பு செய்வதற்கும் அந்நகரத்தை நிர்வாகம் செய்வதற்கும் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைதி வாரியத்தில் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இடம்பெற அதிபர் ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்க அதிபர் தலைவராக இருக்கும் இந்த அமைதி வாரியம் ஒரு புதிய சர்வதேச அமைதி அமைப்பாக செயல்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
கூடுதலாக எந்தவொரு நாடும் அமைதி வாரியத்தில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் உறுப்பினராக நீடிக்க விரும்பினால், அந்நாடு ஒரு பில்லியன் டாலர்களை அதாவது சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாயைச் கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமைதி வாரியத்தில் இணையுமாறு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், கஜகஸ்தான், ஹங்கேரி,மொராக்கோ, அர்ஜென்டினா, பாகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் அமைதி வாரியத்தில் இணைந்துள்ளன.
இந்த அமைதி வாரியத்தில் இணைவதற்கு பிரதமர் மோடிக்கும் அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஏற்கெனவே பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள இந்த வாரியத்தில் சேருவது குறித்து எந்த முடிவையும் இந்தியா இன்னும் எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த அக்டோபரில் எகிப்தில் நடந்த காசா அமைதி திட்டத்தின் சர்வதேச மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தான் கலந்து கொண்டார்.
அமைதி வாரியத்தில் இணைவது குறித்து ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
மேலும் அமெரிக்காவைத் தவிர ஜி7 கூட்டமைப்பின் எந்த உறுப்பு நாடும் ட்ரம்பின் ‘அமைதி வாரியத்தில்’ சேரவில்லை. ஐநா சபையை பலவீனப்படுத்தும் முயற்சியாகத் தான் இந்த அமைதி வாரியத்தை அந்நாடுகள் பார்க்கின்றன.
அதிபர் ட்ரம்பின் காசா அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அமைதி வாரிய சாசனத்தில் காசா பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
















