குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு
மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் தமிழக அரசின் துறை சார்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கான வேளாண் துறையின் சிறப்பு விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
விழாவை ஒட்டி மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை முழுவதும் 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே தருமபுரி வழியாக வரும் ரயில்கள் மற்றும் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். குடியரசு தினத்தை ஒட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பெங்களூரில் இருந்து கேரளா மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் சோதனை செய்யப்பட்டது.
















