மத்தியப் பிரதேசத்தில் இளம் பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய மேக்கப் தண்டனை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நரசிங்பூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இரு இளைஞர்கள், அங்கு வந்த இளம் பெண்களையும், பள்ளி மாணவிகளையும் ஆபாசமாக பேசி கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி போலீசாரின் கவனத்திற்கு சென்றது. அதனடிப்படையில் தக்க நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் அந்த இரு இளைஞர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவர்களுக்கு சட்டப்படியான தண்டனை மட்டும் போதாது என எண்ணிய போலீசார், இருவரின் தலையிலும் விதவிதமாக ஜடை பின்னி மேக்கப் போட்டு அழகு பார்த்தனர்.
தொடர்ந்து அந்த கோலத்திலேயே அவர்களை பொது மன்னிப்பு கேட்க வைத்த போலீசார் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்நிலையில், அந்த வீடியோ இரண்டு லட்சம் பார்வையாளர்களை கடந்து டிரெண்டாகி வருகிறது.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு ஒரு தரப்பினர் பாராட்டு தெரிவித்தாலும், மனித உரிமை ஆர்வலர்கள் இது போன்று பொதுவெளியில் அவமானப்படுத்தும் செயல்கள் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளனர்.
















