பொறுப்புள்ள நாடுகளின் குறியீட்டு பட்டியலில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா 16ஆவது இடத்தை பிடித்துள்ளது.
உலக அறிவுசார் அறக்கட்டளையின் ஒரு புதிய முயற்சியாக Responsible Nations Index RNI என்னும் பொறுப்புள்ள நாடுகளின் குறியீடு பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உதவியுடன் மும்பை இந்திய மேலாண்மை நிறுவனத்தின் வழிமுறை ஆதரவுடனும் மூன்று ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் பட்டியல் முதல்முறையாக தயாரிக்கப் பட்டுள்ளது.
உலக அரங்கில் நாடுகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பதை விளக்குவதே இந்தக் குறியீட்டின் நோக்கமாகும்.
பொறுப்பு இல்லாத அதிகாரம் நீடித்த செழிப்புக்கு வழிவகுக்காது என்றும், நியாயமாகவும், நேர்மையாகவும் நிலையானதாகவும் அதிகாரம் பயன்படுத்தப் படுவதைக் கொண்டே ஒரு நாட்டின் முன்னேற்றம் மதிப்பிடப்பட வேண்டும் என்பதே இந்த ஆராய்ச்சியின் அடிப்படையாகும்.
21 ஆம் நூற்றாண்டில் ஒரு நாட்டைப் பொறுப்புள்ள நாடாக மாற்றுவது எது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான படி இதுவாகும் என்று குறிப்பிட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பொருளாதார வலிமை, இராணுவ வலிமையுடன் பொறுப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நாடுகள் மனித கண்ணியத்தைப் பாதுகாக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மற்றும் உலக அமைதிக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்களிக்க தங்கள் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதையே இந்தக் குறியீடு பிரதிபலிக்கிறது என்று உலக அறிவுசார் அறக்கட்டளையின் நிறுவனர் சுதான்ஷு மிட்டல் கூறியுள்ளார்.
பொறுப்புள்ள நாடுகளின் குறியீடு மூன்று முக்கிய தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது.
குடிமக்களின் கண்ணியம், நல்வாழ்வு மற்றும் அதிகாரமளித்தல் மீதான அதன் கடமைகளைச் சுட்டிக்காட்டும் உள்பொறுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டைச் சுட்டிக் காட்டும் சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் சர்வதேச அமைப்புக்குள் ஒரு நாடு எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் வெளிப்புற பொறுப்பு ஆகிய மூன்று அளவுகோல்களின்படி இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி, IMF, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட ஐநா சபையின் மற்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ஆதார தரவுகளைப் பயன்படுத்தியே இந்தக் குறியீடு உருவாக்கப் பட்டுள்ளது. இதில் 154 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
பொறுப்புள்ள நாடுகளின் குறியீட்டில் முதலிடத்தில் சிங்கப்பூரும் இரண்டாவது இடத்தில் சுவிட்சர்லாந்தும், மூன்றாவது இடத்தில் டென்மார்க்கும் உள்ளன.
பெல்ஜியம், ஜார்ஜியா, செக் குடியரசு, ஆஸ்திரியா மற்றும் குரோஷியா ஆகியவை முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.
ஜெர்மனி பதினொன்றாவது இடத்திலும், போர்ச்சுகல் பன்னிரண்டாவது இடத்திலும், பல்கேரியா பதின்மூன்றாவது இடத்திலும், அயர்லாந்து பதினான்காவது இடத்திலும், நார்வே பதினைந்தாவது இடத்திலும் உள்ளன.
இந்தக் குறியீட்டில் அமெரிக்கா சீனாவை விட முன்னணியில் உள்ள இந்தியா 16 வது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்கா 66வது இடத்திலும், சீனா 68வது இடத்திலும் உள்ள நிலையில், குறைந்த மதிப்பீடுகளுடன் ரஷ்யா 96வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. கடைசியாக 154வது இடத்தில் மத்திய ஆப்பிரிக்காவும், வடகொரியா 146வது இடத்திலும் உள்ளது.
















