திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்ததை பெற்றோர் கவனிக்காததால் ரேபிஸ் நோய் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அருகே உள்ள திருகண்ணமங்கை பகுதியில் வசித்து வரும் முத்து என்பவர் வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது கோழியை பிடிக்க வந்த கீரிப்பிள்ளை, அவரது 7 வயது மகன் நவீனின் கையை கடித்துள்ளது.
அப்போது, அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறுவனுக்கு ஊசி போட்ட பெற்றோர் சிகிச்சை பெறாமல் இருந்துள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனை திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு கீரிப்பிள்ளைபோல செய்கை செய்து திடீரென உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து, சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் மருத்துவர்கள் நல்லடக்கம் செய்தனர்.
















