அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல், அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பதம் பார்த்துள்ளது. பனிப்புயலின் தாக்கம் தொடரும் நிலையில், பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்….
அமெரிக்காவில் வீசிய கடுமையான பனிப்புயல், அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளை உறைய வைக்கும் குளிரில் தள்ளியுள்ளது… கடந்த 1994ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவை தாக்கிய மிக மோசமான புயலாக பார்க்கப்படுவதால், இதன் தாக்கமும் அளவிடாத முடியாத அளவுக்கு உள்ளது…
இதன் காரணமாக ஆர்கன்சஸ் தொடங்கி ஓஹியோ, டெக்சாஸ், மாசசூசெட்ஸ், மிசிசிப்பி, டென்னசி, நியூ இங்கிலாந்து வரை 2 அடி உயரத்திற்கும் மேல் பனி படந்துள்ளது… இதனால் சாலை மற்றும் வான் போக்குவரத்து முடங்கியுள்ளது…
பனிப்புயல் 25 பேரின் உயிரை குடித்துள்ள நிலையில், மைனஸ் 31 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையால் பொதுமக்கள் நடுநடுங்கிப் போயுள்ளனர்…
சாலைகள், குடியிருப்புகள், வாகனங்கள் என எல்லாமே பனிக்கட்டிகளாக மாறியுள்ளன… பனிப்பொழிவு, மழை போன்று பெய்து கொண்டே இருப்பதாலும், பல லட்சம் வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கடுங்குளிரை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்…
இதன் காரணமாக 20 மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது… ஒரு பக்கம் ராட்சத இயந்திரங்கள் பனியை அகற்ற ஓய்வின்றி உழைத்து வந்தாலும், தொடர் பனிப்பொழிவு அப்பணியையும் முடக்கிப்போட்டுள்ளது…
உறைபனியும், பனிமழையும் கைகோர்த்து கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், உயிரை உறைய வைக்கும் குளிரான இன்னும் பல நாட்கள் நீடிக்கவே வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்….
பனியின் தாக்கம் மக்களை மட்டும் துயரத்தில் தள்ளவில்லை, அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் பதம் பார்த்துள்ளது… இதுவரை பில்லியன் டாலர் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்….
பனிப்புயலால் ஏற்பட்ட இழப்புகளை, சூறாவளி, வெள்ளம், தீ விபத்துக்களை கணக்கிடுவது போல் அவ்வளவு எளிதாக கணக்கிட்டு விட முடியாது. விமானம், ரயில், பேருந்து என அனைத்து போக்குவரத்து வசதிகளும் ஒரே நேரத்தில் பாதிப்பை எதிர்கொள்ளும்போதும், மின் கட்டமைப்புகள் தோல்வியடையும்போதும், பல்வேறு துறைகளின் விநியோக சங்கிலிகளிலும், வணிக நடவடிக்கைகளும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன…
இது ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை குறைக்கக் கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்…
பனிப்புயலால் 11 ஆயிரத்து 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சுமார் 105 முதல் 115 பில்லியன் டாலருக்கு இடையில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என ACCUWEATHER கணித்துள்ளது…
வர்த்தக இடையூறுகள், மின்வெட்டுகள், பல்வேறு துறைகள் முடக்கம் போன்றவற்றை குறிப்பிட்டு, ACCUWEATHER இழப்பை கணக்கிட்டுள்ளது… நிலைமை இன்னும் சீராகாத நிலையில், இந்த இழப்பானது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது…
இதில் பொருளாதார நிபுணர்களிடையே முரண்பட்ட கருத்துகள் இருந்தாலும், இழப்பீடு என்பது அதிகாரப்பூர்வமாக கணக்கிட்டு அறிவிக்கப்படவில்லை…. எனினும் பனிப்புயலின் தாக்கம் மேலும் பல நாட்கள் நீடிக்கும் என்பதாலும், சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகள் இன்னும் நிறைவடைய வில்லை என்பதாலும் பாதிப்பும், இழப்பும் அதிகமாகக் கூடும் என்றே கருதப்படுகிறது.
















