இந்திய இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாமின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்தவெளி வாகனத்தில் வந்து NCC மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து NCC மாணவர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு சென்றனர்.பின்னர், NCC மாணவர்களுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், NCC இந்தியாவின் இளைஞர்களை தன்னம்பிக்கை கொண்ட, ஒழுக்கமான மற்றும் தேசபக்தி மிக்க குடிமக்களாக உருவாக்கும் ஒரு இயக்கம் என்று கூறினார்.
இன்றைய உலகம் இந்திய இளைஞர்களை மிகுந்த நம்பிக்கையுடன் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், இந்தியப் படைகளின் வீரத்தையும், உள்நாட்டு ஆயுதங்களின் நவீனத் தொழில்நுட்பத்தையும் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ உலகிற்கு நிரூபித்துள்ளதாகவும், வளர்ந்த இந்தியா என்பது வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, குடிமக்களின் கடமைகளையும் உள்ளடக்கியது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
















