பண்ருட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முந்திரி வியாபாரி மீது, காரில் வந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு பகுதியைச் சேர்ந்த முந்திரி வியாபாரியான ராஜேந்திரன் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களை கண்ட கந்தன், இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிய நிலையில், ராஜேந்திரன் மீது மர்மநபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக ராஜேந்திரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்,
கார் ஓட்டுநர் பார்த்திபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், குடும்ப பிரச்னை காரணமாக மணிகண்டன் என்பவர் ராஜேந்திரன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, தப்பியோடிய மணிகண்டன் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
















