மேகாலயாவின் வாழும் வேர் பாலங்களை யுனெஸ்கோ அங்கீகரிக்க இந்தியா பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா அதிக காடுகளை கொண்ட மாநிலம் ஆகும். இங்கு அதிக மழையால் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவதால், கான்கிரீட் சாலைகள் மற்றும் இரும்பு பாலங்களை உருவாக்குவது கடினம்.
இதனால் அங்குள்ள காசி, ஜெயந்தியா மலைகளில் வசிக்கும் பழங்குடியினர், தாங்கள் அடர்ந்த காடுகள் வழியாக பயணிக்க பிகஸ் ரப்பர் மரங்களின் வேர்களில் இருந்தே பாலங்களை உருவாக்குகின்றனர்.
ஆற்றின் இரு முனைகளிலும் உள்ள ரப்பர் மரத்தின் வேர்களை, மூங்கில் துண்டுகளுடன் பிணைப்பதன் மூலம் இந்த பாலங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த பாலங்கள் பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளையும் நீரோடைகளையும் கடக்க மக்களுக்கு உதவுகின்றன.
பல நூற்றாண்டுகள் நீடித்து நிற்கும் இந்த உயிருள்ள வேர் பாலங்கள் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
மேகாலயாவின் இந்த வாழும் வேர் பாலங்களை 2026-27-ம் ஆண்டுக்கான உலக பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்கான பரிசீலனைக்காக, அதன் பரிந்துரை ஆவணங்களை பாரீசில் உள்ள யுனெஸ்கோ அமைப்பிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது.
















