கரூரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த குவாரிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் மீது நடத்தப்பட்டிருக்கும் கொடூரத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தாக்குதல் நடத்திய குண்டர்கள் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் அனைவரையும் காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிடவும், மாவட்ட கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு செய்தியாளர்களை தாக்கிய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியிருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம், கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேபோன்று தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கம், மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் என பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
















