மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் பொது இடங்களில் உள்ள சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கிராமங்கள், குடியிருப்புகள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றில் சாதிப் பெயர்களில் இருக்கும் அடையாளங்களை அகற்றக் கோரி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்த பரமசிவம் என்பவர் பெயர்களை அகற்றுவது எளிதல்ல என்பதால் அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, மக்கள் மனதில் இருக்கும் பாகுபாட்டை களையாமல் பொது இடங்களில் இருக்கும் பெயர்களை அகற்றி என்ன பயன்? என கேள்வி எழுப்பினர்,
அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் பொது இடங்களில் இருக்கும் பெயர்களை அகற்றினால் மக்கள் மனதிலும் மாற்றம் வரும் என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
















