டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான சேவா தீர்த்தம் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
சுதந்திரம் பெற்ற காலம் முதல் பிரதமர் அலுவலகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தெற்கு பிளாக்கில் இயங்கி வந்தது.
அது தற்போது நவீன வசதிகளுடன் கூடிய சேவா தீர்த்தம் வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய வளாகத்தில் பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் மத்திய அமைச்சரவை செயலகம் ஆகியவையும் ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. காலனித்துவ அடையாளங்களை நீக்கும் முயற்சியாக, இந்த கட்டடத்திற்கு சேவா தீர்த்தம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதேபோல், மத்திய செயலக கட்டடங்களுக்கு கர்த்தவ்ய பவன் என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

புதிய அலுவலகத்தில் விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்த பிரதமர் மோடி, சில முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார்.
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ரொக்கமில்லா சிகிச்சை வழங்கும் புதிய திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் இலக்கை 3 கோடியிலிருந்து 6 கோடியாக உயர்த்தும் திட்டம், விவசாயக் கட்டமைப்பு நிதி ஒதுக்கீட்டை ஒரு லட்சம் கோடியிலிருந்து 2 லட்சம் கோடியாக உயர்த்தும் திட்டம் ஆகிய கோப்புகளில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
பிரதமர் அலுவலகத்திற்கு புதிய முகவரி கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது காலியாகியுள்ள தெற்கு மற்றும் வடக்கு பிளாக் கட்டடங்கள், பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்புடன் பிரம்மாண்ட அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளன.
















