மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க ஸ்டாலின்தான் காரணம் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இடஒதுக்கீடு குறித்து திமுகவினர் பேசியதற்கு ஆதாரம் உண்டா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டசபையில் பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, தமிழகத்தைவிட இருமடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தின் கடன் 7 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடியை தாண்டியிருப்பதாக கூறினார்.
தமிழகத்தில் 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் வாங்கிய மொத்த கடனைவிட கடந்த 5 ஆண்டுகளில் தற்போதைய ஆட்சியின் கடன் மட்டும் 5.5 லட்சம் கோடி உயர்ந்திருப்பதன் மூலம் தமிழக அரசின் நிதி மேலாண்மையை புரிந்து கொள்ள முடிவதாக அவர் விமர்சித்தார்.
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது குறைய வேண்டிய கடன் சுமை, தமிழகத்தில் மட்டும் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், அவற்றை மறைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் திமுக அரசு போலியான விளம்பரங்களை செய்து வருவதாகவும் கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டினார்.
பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் மாளிகைக்கு முன்பாக, எதிர்க்கட்சியாக இருந்த திமுக நடத்திய போராட்டத்தால்தான் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டமானதாகத் தெரிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை திமுகதான் வலியுறுத்தியது என்பது தவறான தகவல் என்று கூறினார்.
உண்மைக்கு புறம்பான தகவல்கள் சட்டப்பேரவையில் பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பேச்சை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளதால் சட்டசபையில் காரசாரமான விவாதம் நடந்தது.
















