தமிழகத்தில் வடமாநில மாணவிகளுக்கு படிக்க இடம் கிடைத்தால், அவர்களின் பெற்றோர் நிம்மதியாக இருப்பார்கள் என, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் மாநிலங்களின் உதய தின விழா சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழ் மக்கள் மிகுந்த விருந்தோம்பல் குணமுடையவர்களாகவும், அன்பானவர்களாகவும் உள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டை தங்களது சொந்த வீடு போல் நினைத்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழ் மக்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தை இன்று வரை பின்பற்றி வருவதாகவும், பழமையான கல்வி நிலையங்கள் இன்றளவும் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு தமிழ்நாட்டில் படிக்க இடம் கிடைத்தால் அவர்களின் பெற்றோர் நிம்மதியாக இருப்பார்கள் எனவும், இந்த நிம்மதி பிற இடங்களில் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
















