திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி., இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் .
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு விசாரித்தது. நகராட்சி நிர்வாகத் துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்த சூழலில், அதிமுக எம்.பி., இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக நேரு வழக்கு தொடர்ந்தால், தனது வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
















