இரட்டை இலை சின்னத்துக்கு தடைகோரிய மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், இரட்டை இலை சின்னத்துக்கு தடை கோரியும் புகழேந்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எஸ்.ஐ.ஆர் பணிகள் காரணமாக அதிமுக கட்சி விவகாரம் குறித்த மனுக்கள் மீது முடிவு எடுக்க இயலவில்லை என்றும் இது போன்ற மேலும் 6 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த புகழேந்தி தரப்பு வழக்கறிஞர், எஸ்.ஐ.ஆர் பணிகள் கடந்த சில மாதங்களாக தான் நடைபெறுகிறது என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகார் கொடுத்தும் தலைமை தேர்தல் ஆணையர் திட்டமிட்டே கால தாமதம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
அதனை தொடர்ந்து தேர்தல் வருவதற்கு முன்பே ஏன் முடிவு எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், 4 வாரத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
















