ஏஐ தொழில்நுட்பம், தற்போது மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நம்பத்தகுந்த மின்னஞ்சல்கள், கவரும் விளம்பரங்கள் மற்றும் போலியான சட்ட அறிவிப்புகளை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றும் புதிய வகை மோசடிகள் உலகளவில் அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் நடத்திய ஆய்வுகளின்படி, மோசடிக்காரர்கள் OpenAI உள்ளிட்ட முன்னணி AI தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, மோசடி மின்னஞ்சல்களில் எழுத்துப் பிழைகள் அல்லது இலக்கணப் பிழைகள் இருக்கும். அதன் மூலம் அவை போலி என்று கண்டறியப்படும். ஆனால், தற்போது AI உதவியுடன் மிகத் துல்லியமான மொழியில், அதிகாரப்பூர்வமான நிறுவனங்களிடமிருந்து வருவது போன்றே செய்திகளை மோசடிக்காரர்கள் உருவாக்குகின்றனர்.
AI தொழில்நுட்பம் இணையப் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு இல்லையென்றால், பொதுமக்கள் பெரிய நிதி இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் டிஜிட்டல் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
















