மதுரையில் தவெக மாவட்ட செயலாளர் தன்னிடம் 16 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக, அக்கட்சியின் பெண் நிர்வாகி குற்றம் சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெற்கு மாவட்டத்தில் தவெக மகளிர் அணி அமைப்பாளராக இருந்த ஷர்மிளா, அண்மையில் சுற்றுச்சூழல் அணி நிர்வாகியாக மாற்றப்பட்டார். இந்நிலையில், தவெக மாவட்ட செயலாளரான தங்கபாண்டி தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஷர்மிளா அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வீடியோவில் பேசிய அவர் தங்கபாண்டி தன்னிடம் 16 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும், கூடுதல் பணம் தரவில்லை என்பதற்காக தனது பதவியை பறித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது நகைகளை அடகு வைத்து மாதந்தோறும் அவருக்கு பணம் கொடுத்ததாக தெரிவித்துள்ள ஷர்மிளா, பணத்தை திருப்பிக்கேட்டபோது மிரட்டி அவமதித்ததால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.
















