பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 1-ம் தேதி மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இதனால் திருப்பரங்குன்றம் கோயில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாநகர போலீசாரும், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
திருப்பரங்குன்றம் கோயில் முழுவதும், பாதுகாப்பு கருதி ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கோயில் கொண்டு வரப்பட்டுள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
















