தென்னை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுடன் கலந்தாலோசித்து புதிய திட்டம் உருவாக்கப்படும் என மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற தென்னை விவசாயிகள் மாநாட்டில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
தென் இந்தியாவில் சுமார் ஒரு கோடி விவசாயிகள் தென்னை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில், மாநாட்டில் வெள்ளைப் பூச்சி தாக்குதல், பழைய மரங்களால் உற்பத்தி குறைவு போன்ற பிரச்சினைகளை தீர்க்க, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட புதிய ரகங்களை உருவாக்குவது, இயந்திர பயன்பாடு அதிகரிப்பு, இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு, மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக கூறினார். அமெரிக்கா – ஈரான் போர் பதற்றத்தால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான தீர்வுகளை மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு மாநிலங்களுடன் கலந்துபேசி நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
முன்னதாக தனக்கென வைக்கப்பட்டிருந்த தனி இருக்கையை மாற்றி வைத்து தான் ராஜா அல்ல மக்களுக்கான சேவகன் எனக்கூறி மத்திய அமைச்சர் மற்றவர்களுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றது.
















