விழுப்புரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், துணை நடிகை, இரண்டு சிறார்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் பில்ராம்பட்டு கிராமத்தில், சவுக்கு தோப்பு ஓடையில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், கொல்லப்பட்ட நபர் நெல்லை மாவட்டம் நம்பிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்தது.
இவர், சினிமாவில் சிலருக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததும், குறும்படங்களை இயக்கி வந்ததும் தெரியவந்தது. ஜெயக்குமார் திருமணமாகி விவாகரத்து பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயக்குமார் உதவியால் இரண்டு குறும்படங்களில் நடித்ததாக கூறப்படும் பூஜா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 5 ஆண்டுகளாக பூஜாவும், ஜெயக்குமாரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், ஜெயக்குமார் பூஜாவை திருமணம் செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் ஜெயக்குமார் பூஜாவிற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, பூஜாவின் முன்னாள் காதலன் தேவா, அவரது நண்பர் ஐயப்பன் உள்ளிட்டோர், ஜெயக்குமாரை கொல்ல திட்டம் தீட்டி, பில்ராம்பட்டு பகுதிக்கு வரவழைத்து சவுக்கு தோப்பில் அரிவாளால் வெட்டிக் கொன்று ஓடையில் வீசியுள்ளனர்.
இந்நிலையில், சிசிடிவி, மொபைல் சிக்னல் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் ஐயப்பன், பூஜா, தேவா மற்றும் இரண்டு சிறார்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
















