விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கால அவகாசம் வழங்குமாறும், விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்குமாறும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு தொடர்பாக சிசிடிவி காட்சிகள், செல்போன் டவர் லொகேஷன் உள்ளிட்டவற்றை கைப்பற்றி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், டிஎன்ஏ பரிசோதனை அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைப்பதாகவும் அன்றைய தினம், நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
















