சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அந்நாட்டுக்கு முழுமையான ஆதரவையும் ராணுவ ஒத்துழைப்பையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளார். எனினும், சவூதிக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சவூதி அரேபியாவுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் பாகிஸ்தானை ஈரான் போரில், சவூதி அரேபியாவுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பரில் தான் கையெழுத்திட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்,இவ்வளவு சீக்கிரம் தனக்கு தர்ம சங்கடத்தைத் தரும் என்று பாகிஸ்தான் நினைத்துக் கூட பார்த்திருக்காது.
சவூதி அரேபியாவுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் அணுசக்தி நாட்டின் இராணுவ வலிமைக்கான அங்கீகாரமாகவும் நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வாகவும்,அதிகமான நிதி உதவியாகவும் மாறும் என்றுதான் பாகிஸ்தான் எதிர்பார்த்தது.
மூன்றாம் நாடு ஒன்று தாக்குதல் நடத்தும் பட்சத்தில், ஒருவருக்கொருவர் பாதுகாப்புக்குத் துணை நிற்போம் என்ற உறுதிமொழியுடன், இரு நாடுகளும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கத்தாரில் இருந்த ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் தாக்கி அழித்த நேரத்தில் சவூதியும், பாகிஸ்தானும் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தின
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேலை மட்டுமின்றி,வளைகுடா நாடுகள் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகிறது.
சவூதி அரேபியா மீது ஈரான் தாக்குதல்களைத் தொடங்கிய உடனேயே அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பாகிஸ்தான் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், சவூதியின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில்,சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் சவூதிக்கு விரைந்து சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் எப்போதும் சவூதி அரேபியாவுடன் உறுதியாக நிற்கும் என்றும், அமைதிக்கான இரு நாடுகளின் பரஸ்பர விருப்பத்துக்காக பாடுபடும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும் இந்தச் சந்திப்பின் போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளையும், மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி இளவரசருடனான சந்திப்பின் போது பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டார் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியுமான ஃபீல்ட் மார்ஷல்அசிம் முனீர் ஆகியோரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றொரு நாட்டுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்காக அல்ல என்றும், குறிப்பாக சவூதி அரேபியாவைப் பாதுகாப்பதற்காகவே என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் பேசியுள்ளார்.சவூதிக்கு இராணுவ உதவியை செய்தால் அது பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவையும் மேலும் சிக்கல்களையும் கொண்டுவரும் என்றே அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இன்னொரு புறம் ஈரானுடன் மோதலை கடைப்பிடிக்க விரும்பாத சவூதி அரேபியா, நேரடியாக, ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
















