நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பீகாரில் NDA கூட்டணியின் முழுமையான வெற்றியின் மூலம் ராஜ்ய சபாவில் பாஜகவின் கை ஓங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
245 உறுப்பினர்கள் கொண்ட இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் பெரும்பான்மைக்கும் குறைவாகவே உறுப்பினர்கள் இருந்தனர். அதில் பாஜக 103 உறுப்பினர்களுடன் மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
இந்தியாவின் நான்கு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் எதிர்கட்சிகளின் இந்தியக் கூட்டணிக்கு , மாநிலங்களவையில் 79 உறுப்பினர்கள் உள்ளனர். மற்ற கட்சியினர் மற்றும் நியமன உறுப்பினர்கள் என 30 பேர் உள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஏழு, ஒடிசாவில் நான்கு, தமிழ்நாட்டில் ஆறு, மேற்கு வங்கத்தில் ஐந்து, அசாமில் மூன்று, பீகாரில் ஐந்து, சத்தீஸ்கரில் இரண்டு, ஹரியானாவில் இரண்டு, இமாச்சலப் பிரதேசத்தில் ஒன்று மற்றும் தெலங்கானாவில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவி காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிகிறது.
எனவே, 10 மாநிலங்களில் உள்ள 37 மாநிலங்களவை இடங்களில் பீகார், ஒடிசா மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள 11 இடங்களுக்கு மட்டுமே கடந்த மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 26 இடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பீகாரில் மொத்தமுள்ள 5 இடங்களையும்முழுமையாக கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, ஒடிசாவில் மூன்று இடங்களிலும், ஹரியானாவில் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது.
ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ் குமார், பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபின், இருவரும் வேற்றி பெற்றுள்ளனர். இவர்களுடன் மத்திய அமைச்சர் ராம் நாத் தாக்கூர், பாஜகவைச் சேர்ந்த சிவேஷ் குமார் மற்றும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவும் வெற்றிப் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் ராஷ்ட்ர ஜனதா தளத்தின் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் வாக்களிக்க வராததால் பாஜகவைச் சேர்ந் சிவேஷ் குமார் முதல் முறையாக பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு வேற்றி பெற்றுள்ளார்.
ஒடிசாவில் நான்கு இடங்களுக்கு நடந்த போட்டியில் பாஜக மூன்று இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. ஒரு இடத்தில் பிஜு ஜனதா தளத்தின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல், ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுஜீத் குமார் ஆகிய இருவரும் BJDயைச் சேர்ந்த சந்த்ருப்த் மிஸ்ராவும் வெற்றி பெற்றுள்ளனர்.
நான்காவது இடத்துக்கான போட்டியில் ,பிஜு ஜனதா தளத்தின் தத்தேஸ்வர் ஹோட்டாவும் பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரான திலீப் ராயும் இருந்தனர்.
இதில் திலீப் ராயின் வெற்றிக்கு 8 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் தத்தேஸ்வர் ஹோட்டாவுக்கு 12 வாக்குகள் தேவைப்பட்டன. இதில் பிஜு ஜனதா தளத்தின் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் திலீப் ராய்க்கு ஆதரவாக வாக்களித்ததால், பிஜு ஜனதா தளத்தின் தத்தேஸ்வர் ஹோட்டா தோல்வியடைந்தார்.
ஹரியானாவில் இருந்து இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான போட்டியில் பாஜகவின் சஞ்சய் பாட்டியாவும், காங்கிரஸின் பௌத்தும், சுயேச்சை வேட்பாளர் சதீஷ் நந்தாலும் வேட்பாளர்களாக இருந்தனர்.
பாஜகவின் சஞ்சய் பாட்டியாவும், காங்கிரஸ் கட்சியின் கரம்வீர் சிங் பௌத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குத் தனியாக அறுதி பெரும்பான்மை இடங்களைக் கொடுக்கவில்லை என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 125 இடங்கள் வரை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மாநிலங்களவையில் நிகழ்ச்சி நிரலை தங்கள் எண்ணத்துக்கு ஏற்ப வடிவமைக்கும் வலிமையை பாஜக.,விற்கு தந்துள்ளது.
















