சிவகங்கை ஆகாஷ் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை இளைஞர் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார் என கேள்வி எழுப்பினர். நீதிமன்றத்தை தனிப்பட்ட விருப்பத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்த நீதிபதிகள்,உடல் அங்கேயே அழுகிவிட வேண்டுமென விரும்புகிறீர்களா என வினவினர்.
இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றம் ஏற்க இயலாது எனக்கூறிய நீதிபதிகள்,
உடலுக்கு இறுதி மரியாதை செய்யாமல், அரசியல் செய்வது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்தனர்.
உடலை வைத்து போராட்டம் நடத்துவது தற்போது பேஷனாகி விட்டது என வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட வேண்டியது அடிப்படை உரிமை என கூறினார். மேலும், விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















