புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தின் அடையாளச் சின்னமாக விளங்கிய மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவு, சீரமைப்பு பணி என்ற பெயரில் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுதொடர்பான முழு விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…
குற்றாலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது ஆர்ப்பரித்துக் கொட்டும் மெயின் அருவியும், அதன் முன்னே கம்பீரமாக நின்றிருந்த அந்தப் பாதுகாப்பு வளைவும்தான். நூறு ஆண்டுகளைக் கடந்தும், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி நின்ற அந்த வரலாற்று அடையாளம், தற்போது சீரமைப்புப் பணி என்ற பெயரில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
காரைக்குடியைச் சேர்ந்த எஸ்.ஏ. அண்ணாமலை செட்டியார் என்பவரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த வளைவு, வெறும் அழகுக்காகக் கட்டப்பட்டதல்ல. அது ஒரு துல்லியமான பாதுகாப்பு அளவுகோலாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அருவியில் விழும் தண்ணீர் இந்த வளைவைத் தாண்டி வரும்போது, அது குளிக்க ஆபத்தான அளவு எனக்கருதப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வந்தன.
1992-ல் ஏற்பட்ட கோரமான வெள்ளம் உட்பட, கடந்த ஒரு நூற்றாண்டில் சந்தித்த பல்லாயிரக்கணக்கான வெள்ளப் பெருக்குகளிலும் இந்த வளைவு ஒரு சிறு விரிசல் கூட இன்றி நிலைத்து நின்றது. இந்நிலையில், சுற்றுலாத் துறையின் சார்பில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குற்றாலத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், அருவிக்கரையை விரிவுபடுத்தி, ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் குளிக்கும் வகையில் தரைத்தளத்தை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பழைய வளைவை அகற்றிவிட்டு, அதே இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வளைவு மற்றும் ஆழமற்ற குளம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் ஊடகங்களுக்குக் கூட தெரியப்படுத்தாமல், நூறு ஆண்டு கால உறுதியான வளைவை இடித்தது துரதிஷ்டவசமானது என்று முன்னாள் எம்எல்ஏவும், இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவருமான ரவி அருணன் வேதனை தெரிவித்துள்ளார்.
அருவி முன் அமைக்கப்பட்டுள்ள தடாகம் என்றழைக்கப்படும் குழியை மூடினால், வெள்ள நீர் ஆற்றுக்குள் செல்லாமல் பெண்கள் குளிக்கும் பகுதி வழியாக ஊருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என அப்பகுதிவாசிகள் எச்சரிக்கின்றனர். மேலும், பழைய வளைவு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்தது என்றும், இனி வரும் புதிய கட்டமைப்பு அந்தத் தரத்துடன் இருக்குமா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர் உள்ளூர் வாசிகள்…
புதிதாக அமையவுள்ள வளைவு, இடிக்கப்பட்ட வளைவை போன்று, அதே பலத்துடனும், தரத்துடனும் அமைய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த குற்றாலப் பிரியர்களின் ஒற்றைக் கோரிக்கையாக இருக்கிறது…..
















