தேர்தல் பரப்புரை பணிகள் முடியும் வரை தமிழகத்தில் இருந்து அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
சட்டமன்ற தேர்தலை ஒட்டி அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பணிகளை மத்திய அமைச்சரும், மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் மேற்கொண்டு வருகிறார்
. இந்த நிலையில் தேர்தல் பரப்புரை பணிகள் முடியும் வரை தமிழகத்திலேயே இருந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுமாறு பியூஷ் கோயலுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி அடுத்த 15 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க பல்வேறு வியூகங்களை வழங்க உள்ளதாகவும், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் எனவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாளை தமிழகம் வருகை தரும் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.
அதன்படி முதற்கட்டமாக மதுரையில் தேவேந்திரபட்னாவிஸும், நாகர்கோவிலில் பவன் கல்யாணும் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















