அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி நடந்த நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்காவுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள அரோரா பகுதியில், இந்து கோயிலை குறிவைத்து, துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக தெரிவித்தார்.
வெறுப்புணர்வின் அடிப்படையிலான வன்முறைகளுக்கு எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டக்கூடாது என்று வலியுறுத்திய ஜெய்ஸ்வால்,
இந்து கோயிலை தாக்க திட்டமிட்ட சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரித்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம் என்றும் ரன்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தினார்.
















