தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக உள்ளிட்ட 7 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி பிரதமருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக உள்ளிட்ட 7 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 13-ம் தேதி மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 64 நாட்கள் கடந்தும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படவில்லை என மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளதை கிரண் ரிஜிஜு சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பிறகு, குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த கூட்டத் தொடரை முறைப்படி முடித்து வைக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தக் கட்டாயமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் நாடாளுமன்ற அவைகள் நீண்ட நாட்களுக்கு முறைப்படி முடித்து வைக்கப்படாமல் இருந்ததற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
















