ஈராக்கில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில்
ஜம்மு-காஷ்மீர் குறித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈராக்கின் பாக்தாத் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக கூறப்பட்ட கருத்துகள் பாரபட்சமானவை, முற்றிலும் பொய்யானவை என்று திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் தனது சுயநல நோக்கங்களுக்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை மீண்டும் ஒருமுறை தவறாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு எந்தவித தகுதியும் இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் பகுதி மிகச்சிறந்த பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைப் பெற்று வருவதை இந்திய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்பில் வைத்துள்ள காஷ்மீர் பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
















