தமிழகம் முழுவதும் 40 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட தருணத்தில், பல்வேறு அரசுஅலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனி குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி அலுவலகம், திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூரில் உள்ள நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல், ஈரோடு நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
















