ராகுல் காந்தியின் தலைமையால் திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை பாரத் ஜோடோ நீதி யாத்திரை என்ற நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கி இருக்கிறார்.
இதுகுறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில், “பாரத் ஜோடோ நீதி யாத்திரை என்பதற்கு பதிலாக காங்கிரஸ் தலைவர்களின் நீதி யாத்திரை என்று ராகுல் தொடங்கினால் நன்றாக இருக்கும்.
ஏனெனில், கட்சியை விட்டு வெளியேறும் தலைவர்களுக்கு ராகுல் நீதி வழங்க வேண்டும். கிழக்கிலிருந்து மேற்கு வரை காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். ராகுலின் தலைமை காரணமாக திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது” என்றார்.
அதாவது, ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்திருக்கிறார். இதைத்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் விலகி வருவதற்கு நீதி கிடைக்க ராகுல் யாத்திரை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று ஷேசாத் பூனவல்லா விமர்சித்திருக்கிறார்.