மும்பையில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் நடந்துள்ளது. இதில் சர்வதேச தலைவர்கள், தொழிலதிபர்கள் , முக்கிய பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
உலகப் பணக்காரர்களில் ஒருவரும் ஆசியாவின் முதல் பணக்காரருமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி -நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி , ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை கவனித்து வருகிறார். இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2023 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் .
குறிப்பாக, ஆனந்த அம்பானி, ராதிகா மெர்சென்ட்டின் நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து வந்தது அவர்களது வளர்ப்பு நாய். அந்த நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிற துணியில் தான் நிச்சயதார்த்த மோதிரம் இருந்தது. நாய் மேடைக்கு வந்ததும் அந்த துணியில் இருந்த மோதிரத்தை ஆனந்த அம்பானி வெளியே எடுத்தார். பின்னர் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக நடைபெற்றன. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், உட்பட வெளிநாட்டு பிரபலங்களும் இந்தியாவை சேர்ந்த ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்,திரைப்பிரபலங்கள் என மொத்தம் 1,000 சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
திருமணக் கொண்டாட்டத்தின் அடுத்தகட்டமாக, சொகுசு கப்பலில் முக்கிய பிரமுகர்களுக்கான கலை இசை நிகழ்ச்சிகளுடன் ஆடம்பர விழா நடைபெற்றது. கடந்த மே 29-ம் தேதி, இத்தாலியில் கிளம்பிய இந்த சொகுசு கப்பல், ஜூன் 1ஆம் தேதியன்று ஸ்விட்சர்லாந்தில் நிறைவு பெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வி.ஐ.பி-க்கள் இந்த சொகுசு கப்பல் விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும், திருமணம் சார்ந்த கொண்டாட்டங்களில் பாப் பாடகி ரிஹானா (Rihanna), பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜின் (Diljit Dosanjh) , மற்றும் ஜஸ்டின் பிபர் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த இசை விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் உட்பட அனைவரும் ஆடி, பாடி விழாக்கால மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் , மும்பை பாந்த்ரா குர்லா பகுதியில் உள்ள , ஜியோ கான்வென்சன் சென்டரில் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில், சர்வ தேச தலைவர்கள் முதல் உள்ளூர் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் போரிஸ் ஜான்சன், டோனி பிளேயர் இருவரும் தம்பதியராக கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினி காந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன், தமிழ் பாரம்பரிய உடையுடன் திருமணத்தில் பங்கேற்றார். கிரிக்கெட் வீரர் தோனி தந்து மனைவி மகளுடன் மஞ்சள் நிற ஆடையுடன் கலந்து கொண்டார்.
ஹாலிவுட் திரைப் பிரபலம், ஜான் சினா “சல்வார் கமீஸ்” எனப்படும் வெளிர் நீல நிற இந்திய ஆடையை அணிந்து வந்தார். பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஜொலிக்கும் ஆடையில் வந்திருந்தனர்.
கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோர் அசத்தல் உடையில் வந்திருந்தனர். மேலும் சர்வதேச பாப் ஸ்டார் ரீமாவும் வந்திருந்தார்.
நடிகர்கள் அஜய் தேவ்கன், அனில் கபூர் ,சஞ்சய் தத் ,ஷாருக் கான், ஹிருதிக் ரோஷன், வருண் தவான், சோஹித் அக்தர், சல்மான் கான், ஜாக்கி செராஃப், அர்ஜுன் கபூர் , வெங்கடேஷ், ராம் சரண், ராணா தகுபதி ,மகேஷ் பாபு மற்றும் ஏ ஆர் ரகுமான், அவரது மனைவி சாயிரா பானு,,பாடகி ஆஷா போஸ்லே,பாடகர் சங்கர் மகாதேவன், பாடகி கவிதா சேத், ட்ரம் இசைக் கலைஞர் சிவமணி, இயக்குனர் அட்லீ , நடிகை நயன்தாரா, விக்னேஷ், நடிகை சாரா அலிகான், நடிகை ஜெனிலியா டிசோசா, நடிகை ஜான்வி கபூர், இயக்குனர் கரண் ஜோகர், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஸ்ரீகாந்த் என பலரும் கலந்து கொண்டனர்.
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா,நடிகர் பிரிதிவி ராஜ் , தயாரிப்பாளர் சுப்ரியா மேனன், நடிகை அனன்யா பாண்டே ஆகியோரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அசத்தல் நடனமாடி விருந்தினரை ரசிக்க வைத்தனர்.
இதில் நடிகர் ரஜினி காந்தும் நடனமாடினார். அவருடன் மணமகன் ஆனந்த அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்தினரும் நடனமாடினார்கள். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய் ,அபிஷேக் பச்சன், நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஜெயாபச்சன், அசத்தல் உடையில் வந்திருந்தனர்.
நடிகை சப்னா அஷ்மி, பாடலாசிரியர் ஜாவீத் அக்தர், இந்தி நடிகர் ரன்வீர் கபூர், நடிகை ஆலியாபட், சுகானா கான், நடிகை ரேகா, நடிகை தீபிகா படுகோனே, நடிகர் அமீர் கான், நடிகை கத்ரினா கைஃப்,நடிகர் விக்கி கவுசல், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா அவர் மனைவி சஞ்சனா கணேசன்,கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா ஷெட்டி, நடிகை மாதுரி தீக்ஷித் ஆகியோரும் வந்திருந்தனர்.
மணமக்களின் குடும்பத்தினர் மட்டுமில்லாமல் விருந்தினர்களும் கண்ணைப் பறிக்கும் ஆடம்பர நவ நாகரீக ஆடைஅணிந்து வந்திருந்தனர். அந்த புகைப் படங்களும் வீடியோவும் சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளன.