மொழி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காகக் கொத்தடிமையாக வாழ்ந்துவந்த ஒருவர் 20 ஆண்டுகளுக்குப் பின் தன் குடும்பத்தினருடன் இணைந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொத்தடிமையாக இருந்தவரை மீட்டு குடும்பத்தினருடன் இணைத்து வைத்த தொழிலாளர் நலத்துறையின் நடவடிக்கையையும், அதற்குத் தீவிர முயற்சி எடுத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் கொத்தடிமைகள் மீட்புக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், கடம்பங்குளம் எனும் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆடு மேய்க்கும் நபர் ஒருவர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
நேரடியாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆந்திராவைச் சேர்ந்த அப்பாராவ் என்பதும், 20 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்திற்கு வேலை தேடி வந்த நிலையில் மொழி தெரியாத ஒரே காரணத்தினால் தற்போது வரை கொத்தடிமையாக ஆடு மேய்த்து வருவதும் உறுதியாகினது.
20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பாராவை ஆடுமேய்க்கும் கொத்தடிமையாகப் பயன்படுத்திய நபர்கள் அவருக்கு இதுவரை ஊதியம் வழங்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அப்பாராவை மீட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலத்தில் வசிக்கும் அப்பாராவின் உறவினர்களை கண்டறிந்து அவர்களைச் சிவகங்கைக்கு அழைத்துவர அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மாவட்ட ஆட்சியரால் மேற்கொள்ளப்பட்டது. அப்பாராவின் மனைவி சீதாம்மாள் இறந்துவிட்ட நிலையில், அவரின் மகள் தும்புதோரா சாயம்மாளை சந்தித்த அப்பாராவ் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார்.
இனிமேல் தன் தந்தையைப் பார்க்கவே முடியாது என நினைத்திருந்த தும்புதோராவும், தன் குடும்பத்தைக் காண முடியாமல் தவித்து வந்த அப்பாராவும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
தொழிலாளர் துறை சார்பில் கொத்தடிமை மீட்புத் தொகையான 30 ஆயிரம் ரூபாய், ஆட்சியரின் சொந்த நிதி ஒரு லட்சம் ரூபாய் மற்றும் தன்னார்வலர்கள் அளித்த நிதி 2 லட்சம் ரூபாயையும் அப்பாராவின் வங்கிக் கணக்கில் செலுத்திய அதிகாரிகள் அவரை குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.