அமெரிக்காவில் குடியேறும் புலம் பெயர்ந்தவர்களின் இந்தியர்கள் சிறப்பானவர்கள் என்று அமெரிக்கா பொருளாதார நிபுணர் பாராட்டியிருக்கிறார்… அமெரிக்க பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு அளப்பரியது என்றும் கூறியிருக்கிறார்.. அதற்கான காரணம் என்ன? பார்க்கலாம்.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் இந்தியர்கள் மீதான வெறுப்பு உணர்வு, இனவெறி அதிகரித்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதற்கேற்றார் போல்தான் அதிபர் டிரம்பின் நடவடிக்கையும் அமைந்திருக்கிறது. ஆனால் இதையெல்லாம் நிராகரிக்கும் வகையில் அமெரிக்க பொருளாதார நிபுணர் டேனியல் டி மார்டினோ ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளன.
குடியேற்றத்தின் நிதி தாக்கம் என்ற பெயரில் மன்ஹாட்டன் இன்ஸ்டிடியூட் சிந்தனைக்குழுவின் பொருளாதார நிபுணரும், உறுப்பினருமான டேனியல் டி மார்டினோ ஆராய்ச்சி கட்டுரையின் ஒரு பகுதியை வெளியிட்டார். அதில், H1B விசா வைத்திருக்கும் இந்தியர்கள் உண்மையிலேயே மதிப்பு மிக்கவர்கள் என்றும், அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்கள் பெரும் பங்காற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அமெரிக்க குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக விமர்சிக்கும் அந்த ஆராய்ச்சி கட்டுரை, குடியேற்ற கொள்கையில் திருத்தங்களை மேற்கொள்ளவும் வலியுறுத்தியது. சிறந்த கல்வி, திறமைகளுடன் குடியேறுபவர்களை அனுமதிப்பதன் மூலம் அமெரிக்கா பொருளாதார வளர்ச்சியை இழக்காது, மாறாக வளர்ச்சி பெறும் என்றும் அந்தக் கட்டுரை கூறுகிறது. H1B விசா நடைமுறைகளை டிரம்ப் கடுமையாக்கியுள்ள நேரத்தில், அமெரிக்க பொருளாதார நிபுணரின் ஆராய்ச்சி கட்டுரை, இந்தியர்களை முன்னிலைபடுத்தியிருக்கிறது.
டி மார்டினோவின் ஆராய்ச்சியின்படி, அமெரிக்காவில் குடியேறும் இந்தியர் ஒருவர், 30 ஆண்டுகளில் இந்திய மதிப்பில் 15 கோடி ரூபாய் கடனைக் குறைப்பார் என்றும், H1B விசா வைத்திருக்கும் இந்தியர், 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 லட்சம் டாலர்கள் அதிகரித்து, 23 லட்சம் டாலர்கள் கடனைக் குறைப்பார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் இடம்பெயர்வு கொள்கை நிறுவனத்தின் பகுப்பாய்வு, 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய குடியேறிகளில் 81 சதவீதம் பேர் குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதைக் காட்டுகிறது, இது மற்ற நாட்டின் தொழிலாளர்களைவிட இரு மடங்கு அதிகம் என்பதையும் கட்டுரை காட்டுகிறது. இந்தியர்களின் மதிப்பை அமெரிக்க அதிபர் உணர வேண்டும் என்பதே இந்த ஆராய்ச்சி கட்டுரை உணர்த்துகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
















