12 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் மருத்துவர்கள் என்பதும், பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவு பெற்ற அல்-ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள் என்பதும் புலன்விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால், பயங்கரவாத மையமாக அல்-ஃபலா பல்கலைக்கழகம் இயங்கி வந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் (Dhauj) தௌஜி என்னும் இடத்தில் 1997ம் ஆண்டு பொறியியல்கல்லூரியாகத் தொடங்கப்பட்டு பிறகு 2014ம் ஆண்டு அல்-பலா பல்கலைக்கழகமாக மாறியது. அல்-ஃபலா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இப்பல்கலைக்கழகத்துக்கு 2015 ஆம் ஆண்டு, UGC அங்கீகாரம் கிடைத்தது.
வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் நிதி பெற்றுவரும் இப்பல்கலைக்கழகம், பொறியியல், மேலாண்மை, வணிகம், சட்டம், கல்வி, மனிதநேயம் மற்றும் மருத்துவ அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை நடத்தி வருகிறது.
சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான தனி விடுதிகள், ஒரு ஊழியர் குடியிருப்பு வளாகத்தையும் கொண்டுள்ள இப்பல்கலைக்கழகதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவர்களில் 40 சதவீதம் பேர் காஷ்மீரை சேர்ந்த முஸ்லீம்கள் என்று கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 200 MBBS இடங்களும், 50 MD இடங்களும் இப்பல்கலைக்கழகத்தில் உள்ளன. மேலும், மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கீழ் 650 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனையையும் இப்பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
NAAC அல்-பலா பல்கலைக்கழகத்துக்கு “A” கிரேடு அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் சுவரொட்டிகள் ஒட்டியதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் ஹரியானா காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் சுமார் 2,900 கிலோ அம்மோனியம் நைட்ரேட், டெட்டனேட்டர்கள் துப்பாக்கிகள், மற்றும் மேம்பட்ட வெடிகுண்டு உதிரி பாகங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் பயங்கரவாத நடவடிக்கைகளின் பாதை அல்-பலா பல்கலைக்கழகத்துக்குச் சென்றது.
அந்தப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் முஷாமில் ஷகீல் கைது செய்யப்பட்டார். அல்-பலா பல்கலைக்கழகத்திலிருந்து நூறு மீட்டர் தொலைவில் முசாமில் ஷகீல் தங்கியிருந்த வாடகை விடுதியில் இருந்து அம்மோனியம் நைட்ரேட், ஏகே-ரக துப்பாக்கி, 20 டைமர்கள், பேட்டரிகள் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல் அமைப்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. முஷாமில் அளித்த தகவலின் அடிப்படையில் லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீத் கைது செய்யப்பட்டார்.
அவரது காரில் இருந்து AK 47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. இருவரையும் விமானம் மூலம் காஷ்மீர் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது . இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அல்-பலா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் நெட்வொர்க்கில் தொடர்பில்இருந்தாகக் கூறப்படுகிறது.
முன்னதாகக் கான்பூரில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப்பணியாற்றியபோது 2013-ல் திடீரென காணாமல் போனதாகவும், பிறகு 2021ஆம் ஆண்டு கான்பூர் மருத்துவக் கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பின் அல்-பலா பல்கலைக்கழகத்தில் ஷாஹீன் சேர்ந்திருக்கிறார்.
டெல்லி கார் குண்டுவெடிப்புக்கான காரணமான டாக்டர் உமரும் இதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த நவம்பர் 11 ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தை சோதனை செய்த தேசிய புலனாய்வு அமைப்புகள் அப்பல்கலைக்கழக ஆய்வகங்கள் ஆர்டிஎக்ஸ் போன்ற வெடிபொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக எட்டு மருத்துவர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக ஆய்வகங்கள் மற்றும் ரசாயன சேமிப்புகளின் தடயவியல் தணிக்கை நடந்து வருவதாகவும் கூறிய ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குமார் குப்தா, பெரிய அளவிலான பயங்கரவாத சதி திட்டம் அல்-பலா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டதா ? என்பது பற்றியும் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நபர்களில் சிலரின் வாட்ஸ்அப் அழைப்பு விவரங்கள் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில் இதுவே அல்-பலா பல்கலைக்கழகம் ஒரு பயங்கரவாத மையமாக இருந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது, மருத்துவராக இருந்து பயங்கரவாதிகளாக மாறியவர்கள் தங்கள் பல்கலைக்கழகத்தில் இருப்பது பற்றி முன்கூட்டியே தெரியுமா? என்ற கோணத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பூபேந்திர கவுரும், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஜமீலும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பல்கலைக்கழக ஆய்வகங்கள், MBBS மாணவர்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளின் கல்வி மற்றும் பயிற்சித் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்றும், ஒவ்வொரு ஆய்வக நடவடிக்கையும் ஒழுங்குமுறை அதிகாரிகளால் பாதுகாப்பு நெறிமுறைகள், சட்டப்பூர்வ விதிமுறைகள் மற்றும் நெறிமுறை தரநிலைகளைகண்டிப்பாகக் கடைபிடிப்பதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அல் பலா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
அல் பலா அறக்கட்டளை குழுவின் தலைவரும் அல்-பலா பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான ஜவாத் சித்திக், தனது 2 சகோதரர்களுடன் ஒரு பில்லியன் ரூபாய் நிதி மோசடியில் தண்டனை பெற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
















