தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் நடுநிலையாகச் செயல்படுவதில்லை என்றும், 18 வயதுக்கு மேலான அனைவரையும் வாக்காளர் பட்டியலில் கொண்டுவர பாஜக முகவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் எஸ்ஐஆர் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பாஜக தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, எஸ்ஐஆர் பணிகளின்போது தவறான வாக்காளர்களை கண்டறிந்து நீக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின்பு அதனை பாஜக முகவர்கள் கண்ணும் கருத்துமாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறினார்.
















