எத்தியோப்பியால் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித சலனமும் இன்றி இருந்த ஹெய்லி குப்லி எரிமலை திடீரென வெடித்து சிதறி ஆசிய நாடுகள்வரை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, எந்த முன் அறிகுறியும் இன்றி வெடித்து சிதறியது ஏன் ? அதற்காக விஞ்ஞானிகள் கூறும் காரணங்கள் என்ன? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது ஹெய்லி குப்பி எரிமலை. இது சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்து சிதறியதால், வானில் 14 கி.மீ உயரத்திற்கு சாம்பலும் புகையும் மேகங்களுடன் கலந்துள்ளது. இதன் காரணமாகப் பல்வேறு நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சாம்பல் சூழ்ந்த மேகங்கள் ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தானை பாதிக்கும் அளவுக்கு அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இத்தோடு நின்றுவிடாமல் சீன வானிலையையும் மாசுப்படுத்தும் அளவுக்குச் சாம்பலை கக்கியிருக்கிறது ஹெய்லி குப்பி எரிமலை. சுமார் 10,000 ஆண்டுகளாகச் செயலற்ற நிலையில் இருந்த இந்த எரிமலை, திடீரென வெடித்தது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்டகாலமாக அமைதியாக இருந்த எரிமலைகள் பெரும்பாலும் அணைந்துவிட்டதாகக் கருதப்படும் சூழலில் இந்த எரிமலை வெடிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெய்லி குப்பி எரிமலையின் மறு செயல்பாட்டிற்கு அதன் மேக்மா பகுதியில் ஏற்பட்ட ஒரு மாற்றம் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதாவது உருகிய பாறைகள், வாயுக்கள் மற்றும் படிகங்கள் குவியும் நிலத்தடி நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தையே விஞ்ஞானிகள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
பூமியின் ஆழத்திலிருந்து புதிய, வெப்பமான மேக்மா உள்ளே நுழையும்போது, அது எரிமலை அமைப்பை மாற்றுகிறது. இந்த மறுஊட்டம் பழைய மேக்மாவை மீண்டும் சூடாக்கி, உட்புற அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்தச் செயல்முறை திடீரென நடந்தால், அது தீவிரமான உட்புற அழுத்தத்தை உருவாக்கி, சுற்றியுள்ள பாறைகளை உடைத்து, எரிமலை வெடிப்பைத் தூண்டுவதாக விளக்குகின்றனர் விஞ்ஞானிகள். இது மட்டுமின்றி ஹெய்லி குப்பியின் திடீர் வெடிப்பிற்கு பல கூடுதல் காரணிகளும் பங்களித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
செயலற்ற தன்மைக்குச் சென்றுவிட்டதாகத் தோன்றும் எரிமலைகள் கூட, புவியியல் தூண்டுதல்களின் சரியான கலவைக்காகக் காத்திருந்து, மீண்டும் செயல்படலாம் என்பதை இந்த எத்தியோப்பியாவின் ஹெய்லி குப்பி எரிமலை வெடிப்பு காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
















