உலகின் பொருளாதார வல்லரசு நாடுகள் பெரும்பாலும் அவற்றின் வலிமை மற்றும் வளர்ச்சிக்காகக் கொண்டாடப்பட்டாலும், சமீபத்தில் அந்நாடுகளே அதிக கடன் சுமையில் இருப்பதாகச் சர்வதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கால் கஞ்சி குடித்தாலும் கடன் இல்லாமல் இருப்பதே நல்லது என்பார்கள். தனிமனிதனுக்கு மட்டுமில்லாமல் ஒரு நாட்டுக்கும் இந்தப் பழமொழி பொருந்தும் என்றாலும் கடன் இல்லாமல் இன்றைய சூழலில் வாழ முடியுமா என்பது பெரிய கேள்விக் குறிதான். உலகப் பொருளாதாரமே இன்றைக்கு கடனால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியமான அறிகுறியாகக் கடன் மாறியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கும் பொதுக் கடன், அரசாங்க செலவுகளுக்கு நிதியளிக்கவும், மக்களைப் பாதுகாக்கவும், முதலீடுகள் செய்யவும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, பிற நாடுகள், உலகளாவிய நிதி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சந்தைகளில் வெளியிடப்பட்ட அரசுப் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் நாடுகள் கடன் வாங்குகின்றன. கடந்த ஆண்டு உலகளாவிய மொத்த பொதுக் கடன் 102 ட்ரில்லியன் டாலர் என்ற உச்சத்தை எட்டியது.
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 94.7 சதவீதமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் உலகளாவிய மொத்த கடன் 110.9 ட்ரில்லியன் டாலரைத் தொடும் என்றும் இப்படியே தொடர்ந்தால் இன்னும் 5 ஆண்டுகளில் 102 சதவீதத்தை தாண்டும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது. இதில் வளரும் நாடுகளில் பொதுக் கடன் 31 ட்ரில்லியன் டாலராகும். இது மொத்த உலக பொதுக் கடனில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக இருந்தாலும், வளர்ந்த பொருளாதாரங்களை விட இரண்டு மடங்கு வேகமாக வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
30.51 ட்ரில்லியன் டாலர் உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்கா, 38.1 ட்ரில்லியன் டாலர் கடன் சுமையில் உள்ளது. உலகின் மொத்த அரசுக் கடனில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 34.5 சதவீதம் ஆகும். குறிப்பாகக் கடந்த 25 ஆண்டுகளில் சீனாவின் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிடமிருந்து மட்டும் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் கடன் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 2,500 அமெரிக்க திட்டங்களுக்கு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான அதிகாரப்பூர்வ துறை சார்ந்த கடனை சீனாவிடம் இருந்து அமெரிக்கா பெற்றுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குக் கடன் கொடுக்கும் சீனா இந்தக் கடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 19.23 ட்ரில்லியன் டாலர் உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனாவின் கடன் 16.98 ட்ரில்லியன் டாலர் ஆகும். ஜப்பான் உலகளாவிய கடனில் 8.9 சதவீத பங்கை கொண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது.
அந்நாட்டின் கடன்–GDP விகிதம் மிகவும் கவலைக்குரிய வகையில் 229.6 சதவீதமாக உள்ளது. இதன் பொருள், டோக்கியோவின் கடன், அதன் பொருளாதாரத்தின் அளவை விட இரட்டிப்பிற்கும் மேல் உள்ளது. இந்தியா இந்தப் பட்டியலில் 3.0 சதவீத அரசுக் கடன் பங்குடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் கடன்–GDP விகிதம் 81.4 சதவீதமாகும். இது அமெரிக்கா (125%) மற்றும் இத்தாலி (136.8%) போன்ற நாடுகளை விடக் குறிப்பிடத் தக்க அளவு குறைவாகும்.
இதனால், இந்தியாவின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் உறுதியானதாக உள்ளது என்பதும், நாட்டின் கடன் நிலை அதன் திறனுக்குள் மேலாண்மை செய்யக்கூடிய அளவிலேயே இருப்பதையும் இது காட்டுகிறது. உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும் என்று உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மதிப்பிட்டுள்ள நிலையில், கடனை நிர்வகிக்கும் திறனுடன் இந்தியா திகழ்கிறது. உலக நாடுகள் பல்வேறு வழிகளில் கடன் பெறுகின்றன.
அதில் சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, பிற அரசுகள், உலகளாவிய நிதி நிறுவனங்கள், மேலும் சர்வதேச சந்தைகளில் அரசு வெளியிடும் பத்திரங்கள் ஆகியவை அடங்கும். கடன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு உதவக்கூடியதாயினும், அளவுக்கு மீறிய கடன் பெரும் அபாயத்தை உண்டாக்கும்.
அது மிக வலுவான பொருளாதாரங்களையும் நிலைதடுமாறச் செய்யக்கூடும். வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள கடன் வாங்குவதையே அனைத்து நாடுகளும் நம்பியிருப்பதையே இந்தப் பட்டியல் காட்டுகிறது. அதிகப்படியான கடன் வாங்குவது கடுமையான அபாயங்களை ஏற்படுத்தி வலிமையான பொருளாதாரங்களைக் கூட நொடியில் சீர்குலைத்துவிடும் என்று சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















