இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணையை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இந்தோனேசியா ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் பிரம்மோஸை பெறும் முதல் இஸ்லாமிய நாடு என்ற சிறப்பையும் இந்தோனேஷியா பெறும். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
டெல்லியில் நடந்த 3வது இந்திய- இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜாப்ரி ஜம்சோடின், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலம் 3750 கோடி ரூபாய் மதிப்பிலான பிரமோஸ் ஏவுகணையை வாங்குவது குறித்து ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், பிலிப்பைன்ஸுக்குஅடுத்தபடியாகப் பிரமோஸ் ஏவுணையை வாங்கும் இரண்டாவது நாடு மற்றும் முதல் முஸ்லீம் நாடு என்ற பெருமையை இந்தோனேசியா பெறும். முன்னதாக 75 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் இந்தியாவின் 76வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்ட இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் திறனைப் பாராட்டியிருந்தார்.
மேலும் பிரதமர் மோடியைச் சந்தித்து, பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு ஆதரவளிக்கும் படி கேட்டுக் கொண்டார். அப்போது அதிபருடன் இந்தியாவுக்கு வந்திருந்த அந்நாட்டின் தலைமைத் தளபதி அட்மிரல் முகமது அலி தலைமையிலான உயர்மட்டக் குழு, பிரம்மோஸ் உற்பத்தி ஆலையைப் பார்வையிட்டது.
இந்தோனேசியாவின் சுகோய் போர் விமானங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்படும் என்றும், இதற்கான கடன் உதவியையும் இந்தியாவே வழங்கும் என்றும் இந்தோனேசியாவின் விமானப்படை மற்றும் கடற்படையை மேம்படுத்தவும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வசதிகளை இந்தியாவே உருவாக்கிக் கொடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றான பிரமோஸ், ஒலியை விட 3 மடங்கு அதிகமான வேகத்தில் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். பிரமோஸ் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிப்பது என்பது நடக்காத காரியம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூரில் பிரமோஸ் ஏவுகணை தாக்குதல்களால் அந்நாடு நிலைகுலைந்து போனது. பாகிஸ்தானின் 10க்கும் மேற்பட்ட விமானப் படைத்தளங்கள் சிதறடிக்கப்பட்டன. ஆப்ரேஷன் சிந்தூரில் பிரமோஸ் ஏவுகணையின் ஆற்றலைக் கண்டு வியந்த உலகநாடுகள் பிரமோஸ் ஏவுகணையை வாங்குவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம், சிங்கப்பூர், புரூனை, எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஒமான், பிரேசில், சிலி, அர்ஜென்டினா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்தியாவிடம் பிரமோஸ் ஏவுகணையை வாங்கிய முதல் நாடாக பிலிப்பைன்ஸ் உள்ளது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ் கடற்படையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் இணைக்கப் பட்டுள்ளன. சீனாவை குறிவைத்து 4 இடங்களில் பிலிப்பைன்ஸ் கடற்படை பிரம்மோஸ் ஏவுகணைகளை நிறுவியுள்ளது. இப்போது உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவும் பிரமோஸை கொள்முதல் செய்ய உள்ளது.
சீனாவின் அச்சறுத்தலுக்கு எதிராக இந்தோனேசியாவும் சுமத்ரா, ஜாவா, போர்னியோ மற்றும் சுலவேசி ஆகிய பெரிய தீவுகளில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பிரம்மோஸை ஏற்றுமதி செய்வது அந்நாடுகளின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிப்பது, பல்வேறு ராணுவத் கூட்டு வசதிகளை நிறுவுவது மட்டுமில்லாமல் அந்நாடுகளுடன் இந்தியாவின் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















