திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு தமிழகத்திற்கு வரவேண்டிய பெரும்பாலான முதலீடுகள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவை நோக்கி செல்வதாக புகார் எழுந்துள்ளது. விளம்பரத்திற்கு காட்டும் ஆர்வத்தை முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் செலுத்த வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாட்டுப்பயணம் என பல்வேறு கால கட்டங்களில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சுமார் 34 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தெரிவித்திருக்கும் புள்ளிவிவரங்களும், நடைமுறைக்கு வந்த முதலீடுகளுக்குமான இடைவெளி மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு வரவேண்டிய வெளிநாட்டு முதலீடுகளும் அண்டை மாநிலங்களை நோக்கி படையெடுப்பதாகவும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
அதிலும் 2021ம் ஆண்டு முதல் கையெழுத்தான ஒப்பந்தங்களில் 23 சதவிகிதமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 16 சதவிகிதம் மட்டுமே செயல்பாட்டிற்கு வந்திருக்கும் நிலையில் சுமார் 80 சதவிகிதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெறும் ஏட்டளவில் மட்டுமே இருப்பதும் அம்பலமாகியுள்ளது.
. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற தொழில் முதலீடுகள் மாநாட்டில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் ஹுவாசிங் காலணி நிறுவனத்துடன் தமிழகத்தில் ஆயிரத்து 720 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்சாலையை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் நிலம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக தென்கொரிய நிறுவனம் தனது நிறுவனத்தை ஆந்திர மாநிலத்தில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
அதோடு உலகின் மிகப்பெரிய ஏசி தயாரிப்பு நிறுவனமான ஜப்பானின் டைகின் நிறுவனமும் ஆந்திராவின் ஸ்ரீநகரில் அதன் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்பிச்சை தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில், அவருக்கு உரிய அழுத்தம் கொடுக்கத் தவறியதால் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தரவு மையமும் ஆந்திராவை நோக்கிச் சென்றிருக்கிறது.
ஆந்திராவில் நான்காவது முறையாக ஆட்சியமைத்த சந்திரபாபு நாயுடு தொழில்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அண்டை மாநில முதலீடுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றை 99 ரூபாய்க்கு குத்தகை, மின்சார கட்டணத்தில் சலுகை என ஆந்திர அரசு கொடுக்கும் கொடுக்கும் சலுகைகளின் அடிப்படையில் இந்தியாவில் தொழில்தொடங்க விரும்பும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்களும் ஆந்திராவையே முதன்மை மாநிலமாக தேர்வு செய்கின்றன. ஆந்திர மாநிலம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் அனைத்தும் வெளிமாநில முதலீடுகளுக்கு சிவப்புக் கம்பளங்கள் விரித்து பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தமிழக அரசோ வெற்று விளம்பரங்களை வெளியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியின் ஒட்டுமொத்த நிதிநிலையையும் அலசி ஆராய்ந்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட திமுக அரசு, தற்போது தான் ஈர்த்திருக்கும் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயங்குவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமலும், ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த முடியாமலும் திணறி வரும் தொழில்துறையால் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்பும் பறிபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விளம்பரம் எனும் பெயரில் மக்கள் பணத்தை வீணடிக்காமல், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
















