ஆப்கானிஸ்தானுடன் வீண் சண்டைக்குச் சென்றதால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. விவசாயம், மருந்து உற்பத்தி, நிலக்கரி இறக்குமதி என அனைத்து துறைகளும் ஆட்டம் கண்டிருக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
அண்மைகாலமாக ஆப்கானிதானுடன் மல்லுக்கட்டி வரும் பாகிஸ்தான், அதன் பின்விளைவுகளை சிந்தித்து பார்க்காமல், இன்று அய்யோ அம்மா எனப் புலம்பி வருகிறது. ஏன் தான் சண்டைக்குச் சென்றோமோ என வருந்தும் அளவுக்குப் பாகிஸ்தானுக்கு BACK FIRE ஆகியிருக்கிறது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிடம் வாங்கிய அடிக்கு, என்ன செய்வதன்றே தெரியாமல் முழித்த பாகிஸ்தான், இந்தியாவின் நட்பு நாடான ஆப்கானிஸ்தானை வம்புக்கிழுத்தது.
ஆனால், பாகிஸ்தானின் அடாவடித்தனத்துக்கு ராணுவ நடவடிக்கையின் மூலம் திருப்பிக் கொடுத்த தலிபான் அரசு, பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை முழுவதுமாக நிறுத்திவிட்டு இந்தியா மற்றும் ஈரானுடன் கைக்கோர்த்தது. இதனைச் சிறிதும் எதிர்பார்க்காத பாகிஸ்தான், அனைத்து துறைகளிலும் பொருளாதார ஆட்டம் கண்டுள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதியில் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானை நம்பியே, விளைபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்க தொடங்கியுள்ளனர்.
நிலக்கரி இறக்குமதியை பொறுத்தவரையில், ஆப்கானிஸ்தானை சார்ந்திருப்பதே பாகிஸ்தானுக்கு லாபம். ஆனால் தற்போது நிலவும் மோதல் போக்கு காரணமாக, தென்ஆப்பரிக்கா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டிருக்கிறது.
மருந்து உற்பத்தித் துறையை எடுத்துக்கொண்டால், ஆண்டுதோறும் 187 மில்லியன் டாலர் அளவுக்கு ஆப்கானிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது அதிலும் தடை ஏற்பட்டிருப்பதால் என்ன செய்வதன்றே தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது பாகிஸ்தான்.
கைபர் பக்துன்வா மாகாணத்திற்கும், பாகிஸ்தான் அரசுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில், பொருளாதார மந்த நிலை காரணமாக வியாபாரிகள் அங்குப் போர்க்கொடி தூக்கியிருப்பது ஷெபாஸ் ஷெரீப் அரசுக்குக் குடைச்சலை கொடுத்துள்ளது.
இருந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாகப் பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருவது, அந்நாட்டு வியாபாரிகளை, விவசாயிகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. 45 நாட்களை கடந்து நீடிக்கும் வர்த்தக தடை எப்போது நீங்குமோ என்ற கவலையும் பாகிஸ்தானியர்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.
















